சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பிங்கின் இலங்கைக்கான திடீர் விஜயத்தின் பின்னணியில் உள்ள இரகசியம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சீனப் பாதுகாப்பு அமைச்சர் நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதோடு இன்றைய தினம் அரச தலைவர், பிரதமர் என பலரையும் சந்தித்துள்ளார்.
கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக சீனாவின் கொலணியொன்றே இலங்கையில் உதிக்கப் போவதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் சீனப் பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம் குறித்து சரத் பொன்சேகா கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சாதாரணமாக எமது படையினர் சிரேஸ்ட அதிகாரிகள் வெளிநாடுகளின் அழைப்பின் பேரில் சென்றுவருவது வழக்கமாகும். இந்நிலையில், வெளிநாடுகளிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் எமது நாட்டிற்கு விஜயம் செய்வது பிரச்சினையல்ல. இருப்பினும், கடந்த காலத்தில் அமெரிக்காவின் இராணுவத் தளபதி இலங்கைக்கு இதுவரை விஜயம் மேற்கொண்டிருக்கவில்லை. வலய நாடுகளின் இராணுவத் தளபதிகள் விஜயம் செய்திருந்தாலும் பெரும்பாலான நாடுகளின் இரண்டாம், மூன்றாம்நிலை அதிகாரிகளே விஜயம் மேற்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், சீனப் பாதுகாப்பு அமைச்சரை எடுத்துக்கொண்டால் அவர் எமது நாட்டுடன் பாதுகாப்பு சார்ந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர் அல்ல. எமது நாட்டின் பாதுகாப்புடன் சர்வதேச பாதுகாப்பை ஒப்பிடும்போது நாங்கள் மிகவும் கீழ்நிலையில்தான் உள்ளோம். அதனால், மிகவும் அதிகாரமுடைய ஒருவர் திடீரென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வெளிநாடு சென்று சொக்கலைட்டுக்கள் உட்பட பொருட்கொள்வனவில் ஈடுபடுவதுபோல் சீனப் பாதுகாப்பு அமைச்சரது இலங்கை விஜயத்தை ஒப்பிடக்கூடாது. அப்படிப்பட்ட ஒருவர் இலங்கைக்கு தற்சமயம் விஜயம் மேற்கொண்டிருப்பதன் பின்னணி மிகவும் அவசியமான காரணமாகவே இருக்கலாம். அந்த இரகசிய காரணம் என்ன என்பதுதான் எமக்குள்ள கேள்வியாகும். அவர் வெறுமனே விடுமுறையைக் கழிப்பதற்காக இங்கு விஜயம் செய்யவில்லை என்றார்.