இலங்கையில் கொரோனா தொற்றுக்கான எஸ்ட்ரா செனிகா என்கிற கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்கும் இரண்டாவது கட்டம் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாளிகாவத்தை மத்திய அரச மருத்துவமனையில் இன்றைய தினம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்றுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டது.
குறித்த வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தாதியர்களுக்கும் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட எஸ்ட்ரா செனகா தடுப்பூசி வழங்கும் முதலாவது முயற்சி கடந்த ஜனவரிமாத இறுதியில் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒருமாதகாலமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதோடு அதில் 9 இலட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டிருந்தன.
இவர்களில் பிரதமர், அரச தலைவர், சுகாதாரப் பணியாளர்கள், முப்படையினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் அடங்குகின்றனர்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
முதல் கட்டமாக சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டம் வடமாகாணத்திலும கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்கள், ஊழியர்கள் என 9 ஆயிரத்து 400 பேர் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மருத்துவ கல்வியாளர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு முதல்கட்டமாக கோவிட்-19 அன்ரோசெனேகா தடுப்பூசி வழங்கப்பட்டது.
அதன் இரண்டாவது டோஸ் வழங்கும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.