இலங்கை மக்களுக்கு இரண்டாம்கட்ட கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை தொடரமுடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப்பிரிவின் பணிப்பாளரான மருத்துவர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
இதேவேளையில், எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கையில் ஒட்சிசன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், கொவிஷீல்ட் தடுப்பூசியை இந்தியாவிடமிருந்து பெற்றபோதிலும் தற்போது அந்த நாடு இருக்கின்ற நிலைமையில் இரண்டாம்கட்ட தடுப்பூசிகள் இப்போதைக்கு பெற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. கொரஸ் என்கிற சர்வதேச ரீதியிலுள்ள பிரபலமான சுகாதார நிறுவனங்கள் இணைந்து ஏற்படுத்திய அமைப்பின் ஊடாக தடுப்பூசிகளை கொள்வனவு செய்து ஏனைய நாடுகளுக்குப் பகிர்ந்தளித்தார்கள். ஆனாலும், இன்று அதனையும் அவர்களால் செய்யமுடியவில்லை. இந்த நிலையில், கொவிஷில்ட் தடுப்பூசி இப்போதைக்குக் கிடைக்காது. அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகின்றது. அதேவேளை, இருவேறு உற்பத்தி தடுப்பூசிகளை கலந்துவழங்குவது குறித்து ஆய்வுகள் நடத்தப்படுகின்ற நிலையில் அது வெற்றியளித்தால் அதனையும் நாங்கள் முன்னெடுப்போம். கொரோனா தொற்றினை தடுப்பதில் நாங்கள் தோற்றுவிட்டோம் எனக் கூறமுடியாது. தற்போதைய நெருக்கடிமிக்க நிலையில் நிலைமைகள் மாற்றமடையலாம். இருப்பினும், இந்த தொற்றானது, நுரையீரல்களையே தாக்குவதால் ஒட்சிசன் நெருக்கடி ஏற்படுகின்றது. அந்த சந்தர்ப்பத்தில் இயந்திரம் மூலமான ஒட்சிசன் ஏற்றுவதற்கான வசதியளிக்கப்படுகின்றது. இலங்கையை பொருத்தவரை இங்கு ஒட்சிசன் உற்பத்தி செய்கின்ற 02 நிறுவனங்கள் இருக்கின்றன. சாதாரண உற்பத்தியை விட மூன்று அடங்கு உற்பத்தி செய்கின்ற வேகத்தை அந்த நிறுவனங்கள் கொண்டிருக்கின்றன.
இதேவேளை, தடுப்பூசி பெற்ற 65 தொடக்கம் 75 பேர் கொரோனா தொற்றுக்கு மீண்டும் இலக்காகிய நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் மருத்துவர் சுதத் சமரவீர இந்த ஊடக சந்திப்பின்போது கூறினார்.