web log free
January 11, 2025

மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது: மே தின செய்தியில் ஜனாதிபதி

மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது என மே தின செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

மக்களுக்கு உறுதியளித்தபடி எமது அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளது. மேலும், எமது பாரம்பரிய மரபுரிமைகளுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்தும் அதேநேரம், விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்வதற்கு தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை எமது சமூகத்திலிருந்து ஒழிப்பதற்கான தெளிவான பொருளாதார திட்டத்தை நாங்கள் வகுத்து, முறையாக செயற்படுத்தி வருகிறோம்.

தற்போதைய கோவிட் 19 நோய்த்தொற்றினால் உலகில் மிகவும் சவாலுக்கு உள்ளாகியுள்ள பிரிவினர் தொழிலாளர் வர்க்கமாகும். எமது நாட்டின் உழைக்கும் மக்களும் முகம்கொடுத்திருக்கும் அந்த யதார்த்தத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. எனவே, உழைக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்காமல் அவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கு ஏற்ற வகையில் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்வித் தகைமைகள் இல்லாத காரணத்தினால் நிர்க்கதியான நிலையில் இருந்த ஒரு இலட்சம் தொழிலாளர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம் மிக உயர்ந்த பயனை அனுபவிக்கும் வாய்ப்பு உழைக்கும் மக்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கிடைத்துள்ளது. கோவிட் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு அளித்து உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு அளித்தது.

புத்தாண்டு காலத்திலும் ரூபா 5 ஆயிரம் கொடுப்பனவை பொதுமக்களுக்கு வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. கோவிட் தொற்றுநோய் நிலைமைகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களின் ஊதியங்கள் எதுவும் குறைக்கப்படவில்லை என்பதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அனைத்து பொது நலத் திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்ததன் மூலமும் உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. அதேபோல், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் மூலம் அந்த மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் வழி செய்தது.

பத்தொன்பது வகையான இறக்குமதி பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து பலப்படுத்தப்படும் சுதேச பொருளாதாரத்தின் நன்மைகளில் பெரும் பகுதி எமது நாட்டின் விவசாய சமூகத்தை முதன்மையாக கொண்டு உழைக்கும் மக்களுக்கே கிடைக்கின்றது. பண்டிகை காலங்களில் விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான தடைகளை நீக்கியதன் மூலம் நீங்கள் பலமடைந்துள்ளீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தைப் போலவே, “வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு” திட்டம் நாட்டில் உழைக்கும் மக்களின் வாழ்க்கையுடன் நேரடி பிணைப்பை கொண்டுள்ளது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக எதிர்பாராத விதமாக தொடர்ந்து இரண்டாவது வருடமாகவும் மே தின கொண்டாட்டங்களையும் ஊர்வலங்களையும் தொழிலாளர்கள் இழந்துள்ளனர். ஆயினும்கூட, உங்கள் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் போராட்டம் வலுவானது என்பதை நாங்கள் அறிவோம். மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்கான திட்டத்துடன் கைகோர்க்கும் உங்களுக்கு சர்வதேச தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்த, அர்த்தப்படுத்திய  மகிழ்ச்சியுடன் எனது சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

எமது நாட்டின் உழைக்கும் மக்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

கோட்டாபய ராஜபக்‌ஷ

2021 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd