மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் நிலையில் அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்னண் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
நுவரெலியா – கொத்மலை ரம்பொட ஆஞ்சிநேயர் ஆலயத்தில் மே தினத்தை முன்னிட்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று காலை நடைபெற்ற விசேட வழிப்பாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வழிபாடுகளில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.விஜயசந்திரன், மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் கே.சுப்பிரமணியம், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் விஷ்வநாதன் புஷ்பா, தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடி கொண்டிருக்கும் போது அரசாங்கம் ரஷ்யாவிலிருந்து நான்கு ஹெலிகொப்டர்களை அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றது. எனவே, முதலில் மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் விமான கொள்வனவு குறித்து கவனம் செலுத்துகின்றனர். இதனை அநாவசிய செலவாக கருதாவிடினும் தற்போதைய நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்குவது உசிதமற்றது.
ஆகவே, தேவையானதுக்கு முதலிடம் கொடுத்து செயற்பட வேண்டும். எனினும் அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செயற்படுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான விவாதத்தை ஒரே நாளில் நடத்தி அதை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
எதிர்கட்சிகளை புறக்கணித்து இவ்வாறு ஜனாநாயக விரோத செயற்பாட்டில் இறங்கியுள்ளளது இது புரியாத புதிராகும். இருபதாவது திருத்தத்தை ஆதரித்து ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்கிய சிறுபான்மை உறுப்பினர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது என்றார்.