web log free
January 11, 2025

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் வாழ்த்து

தமிழக சட்ட மன்ற தேர்தலில் பத்து வருடங்களுக்கு பின்பு அதிகப்படியான தொகுதிகளில் வெற்றிக்கொண்டு, தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் சார்பிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை பின்தள்ளி தி.மு.க அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலினின் வெற்றி இலங்கை வாழ் இந்திய வம்சாவழியினரின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டும். மேலும் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்க்கும், திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதற்கமைய எனது தந்தை ஆறுமுகன் தொண்டமானின்; மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததை நன்றியோடு நினைவு கூறுகின்றேன்.

ஆகவே, கடந்த காலங்களில் திமுகவுடன் உள்ள உறவை மேலும் கட்டியெழுப்பி நட்போடு பயணிப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd