web log free
January 11, 2025

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறிய 86 இந்திய மீனவர்களை கடற்படை தடுத்து நிறுத்தியது

சட்டவிரோதமாக இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 86 இந்திய மீனவர்களையும் 11 மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ளது.

கடல் வழிகள் மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வருபவர்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி, இதைக் கட்டுப்படுத்த, வடமேற்கு மற்றும் வடக்கு கடல் பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளை அதிகரிப்பதாக கடற்படை அறிவித்திருந்தது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பில் இந்தியத் தூதரகம் மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படைக்குத்  தகவல் வழங்கப்பட்டுள்ளது எனக் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து 86 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் 11 மீன்பிடிப் படகுகள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் எவரையும் தடுக்க கடற்படை தொடர்ந்து வடமேற்கு மற்றும் வடக்கு கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd