web log free
January 11, 2025

இந்தியர்களின் வரவை தடுப்பதற்கான எந்தவொரு ஏற்பாட்டினையும் அரசாங்கம் செய்யவில்லை :ஐ.தே.கட்சி குற்றச்சாட்டு

உயிர் பிழைப்பதற்காக இலங்கைக்குள் ஊடுருவுகின்ற இந்தியப் பிரஜைகளை தடுப்பதற்கான எந்தவொரு ஏற்பாட்டினையும்  இலங்கை அரசாங்கம் இதுவரை செய்யவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இரண்டாம்கட்ட தடுப்பூசி வழங்குவதை நழுவவிட்ட இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டினால் இந்தியாவின் நிலைமையே இலங்கையிலும் ஏற்படும அபாயம் இருப்பதாகவும் அந்தக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு கோட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (05) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவருமான சமன் ரத்னப்பிரிய, இலங்கை நிலைமை இந்தியாவை நோக்கி நகர ஆரம்பித்திருப்பதாக எச்சரித்தார்.

இந்தியாவிலுள்ளவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை அரசாங்கம் இதுவரை தடுக்கவில்லை. இந்தியாவைச் சேர்ந்தவர்களை முதலீடு உட்பட பல காரணங்களுக்காக 100 வீதம் இலங்கைக்குள் பிரவேசிப்பதை நிறுத்தவில்லை என்று சுற்றலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். கடற்படையினர் நேற்றிலிருந்தே கைது செய்யும் முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள பலரும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இந்தியப் பிரஜைகளுக்காக தனிமைப்படுத்தல் பொதிகளை அறிமுகஞ் செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பதோடு அரசாங்கமும் வர்த்தகத்திலேயே ஈடுபட்டிருக்கின்றது.

இந்தியப் பிரஜைகள் வெறுமனே  இலங்கைக்கு வராமல் கொரோனா தொற்றினையும் சுமந்துகொண்டே வருகின்றனர். இந்தியாவில் பரவுகின்ற திரிபடைந்த தொற்று இலங்கையிலும் பரவும் ஆபத்திருப்பதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுத் தலைவர் சுதத் சமரவீர எச்சரித்திருந்தார். இந்தியாவில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டு வருவதோடு நாளாந்தம் கோவிட் மரணங்கள் மூவாயிரத்தையும் கடந்து பதிவாகின்றன. இந்த நிலையில் இந்தியப் பிரஜைகளை உள்நாட்டிற்குள் அனுமதிப்பதை நிறுத்த தக்கநடவடிக்கை எடுக்கவில்லை. கொரோனா தொற்றுக்கான இரண்டாம் கட்டதடுப்பூசியை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. பெப்ரவரி 13ஆம் திகதியே கொரோனா தொற்றின் புதிய வைரஸ் இலங்கையில் பரவத்தொடங்கிய போதிலும், ஏப்ரல் 30ஆம் திகதி வரை இலங்கை அரசாங்கம் அதனைத்தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இப்படியே நிலைமை சென்றால் அதனை தடுக்கவும் முடியாமற் போய்விடும். ஆகவே நாட்டை குறுகிய காலத்திற்கு முடக்கஞ்செய்து பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd