கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியில் மியான்குளம் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் மியான்குளம் சந்தியில் அதிவேகமாக பயணித்ததில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரிய வந்துள்ளது.
இதில் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்க வீதியில் வசிக்கும் பரமேஸ்வரன் தனுஜன் (வயது 31), தெகிவளை ஹோட் வீதியில் வசிக்கும் துரைசிங்கம் வினோகா ஆகிய இருவருமே இந்த வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்துள்ள வினோகா வானொலி அறிவிப்பாளர்களான ரேணுகா மற்றும் மேனகா ஆகியோரின் சகோதரியாவார்.