web log free
January 11, 2025

ஜனாதிபதி உத்தரவுக்கமைவாக படைவீரர்களுக்கு உரித்தான நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை

ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தின் மூலம் படைவீரர்களுக்கு உரித்தான நிவாரணங்கள் ஏப்ரல் 27 முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் காரணமாக  இறந்த, அங்கவீனமுற்ற  படை வீரர்களை சார்ந்திருப்பவர்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதலின் மூலம் உரித்தான நிவாரணங்களை 2021 ஏப்ரல்  மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து இன மக்களுக்கும் சுதந்திரமானதொரு தேசத்தை பெற்றுக்கொடுப்பதற்காக படைவீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து ஊனமுற்றனர். எனவே, அவர்களுக்கு வழங்க முடியுமான அனைத்து வசதிகளையும் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்று “சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்களினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனை நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் படை வீரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஏழு திட்டங்களுடன் ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அமைச்சரவை விஞ்ஞாபனங்களுக்கு ஏப்ரல் 27 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

முன்மொழியப்பட்ட நிவாரணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட திகதியிலிருந்து அதனை செலுத்த நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி,

  1. பயங்கரவாதத்தின் காரணமாக இறந்த திருமணமான முப்படையினர் / பொலிஸ் உறுப்பினர்களின் விதவைகளுக்கு, இறந்த உறுப்பினரின் 55 வயது நிறைவடைந்த திகதிக்கு உரித்தாகும் மொத்த ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை எவ்வித மாற்றமுமின்றி விதவைகள் உயிருடன் இருக்கும் வரை செலுத்துதல்.
  2. பயங்கரவாத செயல்களால் இறந்த திருமணமான / திருமணமாகாத முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்களின் பெற்றோருக்கு பெற்றோர் உயிருடன் இருக்கும் வரை, இறந்த உறுப்பினரின் 55 வயது நிறைவடைந்த திகதியிலிருந்து மாதந்தோறும் ரூ .25,000 கொடுப்பனவை வழங்குதல்.
  3. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஊனமுற்று சேவையில் இருந்து நீங்கிய முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்களுக்கு இதுவரையில் உயிருடன் உள்ள வரை வழங்கப்படும் ஊதியங்கள் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் இறக்கும் போது அவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு செலுத்துதல்.
  4. பயங்கரவாத நடவடிக்கைகள் அல்லாத வேறு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஊனமுற்ற முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்களுக்கும் இறந்த உறுப்பினர்களின் தங்கிவாழ்வோருக்கும் குறித்த சம்பவங்கள் குறித்து ஒரு குழுவின் மூலம் ஆராயப்பட்டு, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் 55 வயது பூர்த்தியான திகதியிலிருந்து உரித்தாகும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படும்.
  5. போர் நிலைமைகளின் விளைவாக போருக்குப் பிந்தைய நடவடிக்கைகளில் (வெடிபொருட்களை அகற்றுதல்) ஈடுபடும் போது அங்கவீனமுற்ற / இறந்த ஊனமுற்ற முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் குறித்து ஒரு குழுவின் மூலம் ஆராயப்பட்டு, அவர்களுக்கும் அவர்கள் சார்ந்தவர்களுக்கும் 55 வயது பூர்த்தியான திகதியிலிருந்து உரித்தாகும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் எவ்வித மாற்றமும் இன்றி வழங்கப்படும்.
  6. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக ஊனமுற்று சேவையில் இருந்து நீங்கிய முப்படைகள் / பொலிஸ் உறுப்பினர்கள் 55 வயதை எட்டுவதற்கு முன்பு இறந்துவிட்டால், அவர்கள் 55 வயது வரை உயிருடன் இருந்தவர்களாக கருதி அது வரை அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அவர்களின் தங்கி வாழ்வோருக்கு வழங்கப்படும்.
  7. பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அங்கவீனமுற்று அதனால் ஏற்பட்ட மனநல பிரச்சினைகளின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட ஒரு உறுப்பினருக்கு (55 வயது வரை) உரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்கள் சார்ந்தவர்களுக்கு வழங்குதல்.

 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd