இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆயுர்வேத சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளதாக சுதேச வைத்திய ஊக்குவிப்பு, கிராமப்புற மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்ற சுமார் 299 பேர் மாத்திரமே மேலதிக சிகிச்சைக்காக மேற்கத்தேய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக, நேற்று கொழும்பில் இடம்பெற்ற, ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
சுமார் ஐயாயிரத்து 858 கொரோனா நோயாளிகள் 13 ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றனர், அவர்களில் நான்காயிரத்து 720 பேர் இப்போது முழுமையாக குணமடைந்துள்ளனர். ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 299 கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரமே மேற்கத்திய வைத்தியசாலைகளில் சிகிச்சை தேவைப்பட்டது. ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கொரோனா சிகிச்சை ஆயுர்வேத மற்றும் மேற்கத்திய வைத்திய நடைமுறைகள் இரண்டின் கலவையாக மேற்கொள்ளப்பட்டது.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அரசின் மேற்கத்திய வைத்தியசாலைகளுடன் இணைந்து செயற்படுகின்றது. ஆயுர்வேத வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடையே ஏற்படும் சிக்கல்கள் மிகக் குறைவு, இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த வாரம் கொரோனா சிகிச்சைக்காக மேலும் ஐந்து ஆயுர்வேத வைத்தியசாலைகள் திறக்கப்படும் என்றார்.