“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை நான் கேட்கவில்லை, அதில் எனக்கு ஆர்வமும் இல்லை” என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பில் கட்சிக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை.
அவ்வாறிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனாலும் அவர் ஏன் அதைச் சொல்லியிருக்கின்றார் என்றும் ஒருவருக்கும் தெரியாது.
தலைமை மாற்றம் என்கின்ற விடயம் தொடர்பில் நாங்கள் ஒருபோதும் கலந்துரையாடவில்லை. எனக்கும் அதைப்பற்றி எந்தவிதமான ஆர்வமும் கிடையாது.
அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக நீண்டகாலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்திற்காகவே நான் அரசிலுக்கு வந்தேன். அந்த நோக்கம் நிறைவேறுவதற்காகத் தான் என்னுடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறன” என அவர் மேலும் கூறியுள்ளார்.