web log free
January 12, 2025

யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பதிவான வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள், கப்பம் கோரல்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர்கள் இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.


யாழ்., மருதனார்மடம் சந்தியில் கடந்த முதலாம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவரை வாளால் வெட்டிய சம்பவம் தொடர்பில் யாழ். வலய குற்ற தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஐவரையும் விசாரணைக்கு உட்படுத்தியதில் இந்த விடயம் தெரியவந்ததாக யாழ். பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


இவர்கள் இருவரும் தாம் பெற்றுக்கொண்ட கப்ப பணத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் வாக்கு மூலமளித்துள்ளதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.


அதன்படி தப்பியோடியுள்ளதாக நம்பப்படும் தேவா, ஜெனி எனும் இரு சந்தேக நபர்களே, அங்கிருந்தவாறு யாழில் வாள் வெட்டு சம்பவங்களை வழி நடத்துவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.


இதனிடையே, மருதனார்மடம் சந்தியில் கடந்த முதலாம் திகதி பழக்கடை வியாபாரி வாள் வெட்டுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.


யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்தும் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மீது கடந்த முதலாம் திகதி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.


இந்நிலையில், யாழ். வலய குற்ற தடுப்பு பிரிவினர் நடத்திய விசேட நடவடிக்கையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் நேற்று முன் தினம் ( 26) கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.


பின்னர் சந்தேக நபர்கள் சுன்னாகம் பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Last modified on Tuesday, 28 September 2021 08:15
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd