இரத்தினபுரி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நேற்று முன்தினம் (26) இரவு 7.30 மணியளவில் இல 123, கரதமண்டிய, எம்பிலிபிட்டிய புதிய நகர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் 35 வயது தாயான இந்திரா மல்காந்தி என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேலும் இக்கொலையில் தொடர்புடைய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கணவன்,மனைவிக்கிடையில் நீண்டகாலமாக தகராறு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகளும், ஒரு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
சம்பவ தினம், தம்பதியினருக்கிடையில் தகராறு ஏற்பட்டதையடுத்து, மனைவி தொலைபேசியின் மூலம் முச்சக்கர வண்டி சாரதியொருவரை வீட்டுக்கு அழைத்துள்ளார்.
கணவர் தகராறு செய்வதாகவும் தன்னை கொல்லப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
முச்சக்கர வண்டி அந்த வீட்டிற்கு வந்ததும், தனது ஒரு வயது குழந்தையுடன் தாயார் வீட்டை விட்டு வெளியேறிய போது, குழந்தையை விட்டுவிட்டு வெளியேறுமாறு சச்சரவில் ஈடுபட்டபடி வந்த கணவன், வீட்டின் வெளிப்புறத்தில் மனைவியின் தலையில் துப்பாக்கியினால் சுட்டு படுகொலை செய்தார்.
சந்தேகநபரான 47 வயதுடைய வீரசிங்க ஆராச்சிகே தம்மிக்க குமார என்ற அனுரா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.