அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலேயே எதிரணி உறுப்பினர்கள் மீது அரசாங்கம், வழக்கு தாக்கல் செய்து வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நான்கு வழக்குகளில் இருந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், கருத்து வெளியிடுகையில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார.
அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பழிவாங்கும் நடவடிக்கைகள் தான் இலங்கையில் இன்று காணப்படும் பாரிய பிரச்சினை என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “சிறிய காரொன்றை வாங்குவதற்கு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு அது இன்று அது முடியாமல் போயுள்ளது.
சிறிய கார் மாத்திரமல்ல பெரிய கார்களையும் வாங்குவதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது. அந்தளவுக்கு விலையை அதிகரித்துள்ளனர்.
இவ்வாறான வேலைத்திட்டங்களையே இந்த அரசாங்கம் இன்று முன்னெடுத்துள்ளது.
வெற்றிப்பெறும் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் முன்னிறுத்துவோம். அந்த வேட்பாளரை வெற்றிப்பெறசெய்வது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.