சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களும் பாதாள உலக கோஸ்டிகளும் தங்களது வலையமைப்பின் செயற்பாடுகளை சிறைகளுக்குள் இருந்தவாறு தொடர்ந்து முன்னெடுக்க அனுமதித்தல் அல்லது அவர்களின் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தடுத்து நிறுத்தல் என்பது சிறைச்சாலை அதிகாரிகளின் நடத்தையில் தங்கியுள்ளது.
சிறைச்சாலைகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஆக்கபூர்வமான பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, இதன் காரணமாக சிறைச்சாலைகளில் இருந்து முன்னெடுக்கப்படும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் வெகுவாகக் குறைத்துள்ளன என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதுகாப்பான நாடு, ஒழுக்கம், நல்லொழுக்கம் மற்றும் சட்டத்தை மதிக்கும் சமுதாயத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பாதுகாப்பு செயலாளருமான, ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), ´சிறைச்சாலைகளில் கலவரம் மற்றும் பணயக்கைதிகள் சூழ்நிலைகளுக்கு தயார்படுத்தல்´ எனும் தலைப்பில் சிறைச்சாலை ஆணையாளர்கள் மற்றும் சிறைச்சாலை அத்தியட்சகர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த செயலமர்வு காலி, உனவட்டுன அரலிய சுற்றுலா விடுதி மண்டபத்தில் இன்று காலை (செப்டம்பர் 30) இடம்பெற்றது.
பாதுகாப்பு செயலாளரின் நியமனத்தின் பொறுப்பு மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் வரும் ஒரு அமைச்சின் மிக உயர்ந்த அதிகாரி என்ற முறையில், தேசிய பாதுகாப்பு பொறிமுறையின் மூலம் அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு அவருக்கு உள்ளது எனக் குறிப்பிட்டதுடன் முன்மாதிரியான நடத்தை மூலம் சிறைச்சாலை அதிகாரிகளின் தொழில் கெளரவத்தை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார், அவ்வாறு செய்யத் தவறியவர்கள் சேவையிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கெளரவ அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டு விஷேட உரை ஆற்றினார்.
போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்விற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியுதவியளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் திட்டம் மற்றும் சர்வதேச குற்றத் தடுப்பு மையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒன்றினைவு மூலம் 1997 இல் ஸ்தாபிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சர்வதேச குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் உலகளாவிய முன்னனி நிறுவனமாக உள்ளது.
இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு விவகார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வி ஆர் சில்வா (ஓய்வு), சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷாரா உபுல்தெனிய மற்றும் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பிற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தேசிய நிபுணர் நிலுபுல் குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வின்போது சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தினால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைகப்பட்டமை குறிப்பிடத்தக்கது.