623 பொருட்களின் இறக்குமதி உத்தரவாத விலை நீக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முடிவில் 5% மற்றும் 2022ன் முதல் காலாண்டில் 6.5% பொருளாதார வளர்ச்சி ஏற்படுமென ஆறு மாத கால வரையறையை வெளியிட்டார் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்.
அத்தியாவசியமற்ற 623 பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த 100% உத்தரவாத தொகை வைப்பு கட்டுபாடு உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தடைவிதித்திருந்த 6 நிதி நிறுவனங்களுக்கு தடை நீக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மற்றும் வாகன பறிமுதல், கடன் கொடுப்பனவுகளில் அதிகம் மக்களை அழுத்தத்திற்குள்ளாக்குதல் என்பவற்றை 6மாதத்திற்கு தவிர்க்குமாறு கூறப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
நாட்டின் பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதிக்கட்டமைப்பின் ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்துவதை இலக்காக கொண்ட எதிர் வரும் 6மாத காலத்திற்கான செயற்திட்டத்தை நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்யோகபூர்வமாக வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் வலுப்படுத்துவதை நோக்காக கொண்டு இந்த செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனூடாக கடந்த காலத்தில் "ஆசியாவின் ஆச்சரியம்" என்றும் "ஆசியாவின் அடுத்த அதிசயம்" என்றும் வர்ணிக்கப்பட்ட எமது நாடு, கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளபட்டது. ஆனால் இது எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல இருப்பினும் தற்போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் நேர்மையான துலங்கலை காண்பிக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
அதேவளை கொவிட்-19 வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட பங்களிப்புகள் உரியவாறான அங்கீகாரத்தை பெறவில்லை. உண்மையில் அவை பாராட்டப்பட வேண்டியவையாகும்.குறிப்பாக கொவிட் -19 சௌபாக்கிய மீள் நிதி வழங்கள் திட்டத்திற்கென 165.5 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான உதவிகளை வழங்க 2002 பில்லியன் ரூபாவும் மத்திய வங்கியினால் ஒதுக்கிடப்பட்டுள்ளது.
443 வருட கால அந்நியர்களின் ஆட்சி, 30 வருடகால போர், மின்சார மற்றும் வலுசக்தி நெருக்கடி, சுனாமி உள்ளிட்ட பாரிய இயற்கை அனர்த்தங்கள், உலகளாவிய தொற்றும் பரவல் உள்ளடங்கலாக இலங்கையானது காலத்திற்கு காலம் பல்வேறு சவால்களின் போது அரசாங்கமோ மத்திய வங்கியோ மாத்திரம் தனித்து செயற்பட்டு அதனை வெற்றி கொள்ள முடியாது. மாறாக வங்கி கட்டமைப்புகள், வங்கியில்லா கட்டமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அபிவிருத்தி பங்கீட்டாளர்கள் , முதலீட்டாளர்கள், சேவை வழங்குவோர், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புவோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுவதனூடாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாம் இப்போது பொருளாதாரம் எதிர்கொண்டிருக்கக்கூடிய பிரச்சினைகளை இனங்கண்டிருக்கின்றோம். எனவே அவற்றை நிவர்த்தி செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை 3 கட்டங்களாக பிரித்துள்ளோம். 1ம் கட்டம் எதிர்வரும் 6மாத காலத்திற்கும் 2ம் கட்டம் ஒரு வருட காலத்திற்கும் 3ம் கட்டம் நடுத்தர நீண்ட காலத்திற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் படி எதிர்வரும் 6 மாத காலத்தில் கடன் சேவை , ஏற்றுமதி சேவை, சுற்றுலா துறை என்பவற்றை ஊக்குவிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அரசாங்கத்தின் கடன் கொள்கையை காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் , வங்கி துறையின் செயல்பாடுகள் சாதகமான மட்டத்திலுள்ள போதிலும் சில பிரிவுகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துதல், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இலகுபடுத்தல் என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் நிர்ணயிக்கப்பட்டிருந்த 100% உத்தரவாத தொகை கட்டுபாடுகள் நேற்று முதல் நீக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவாத கட்டுபாடினால் இறக்குமதியாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்த நிலையில் அதனை நீக்கியுள்ளோம் என அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், கொவிட் -19 வைரஸ் பரவலின் பின்னாரான புதிய இயல்பு நிலையின் கீழ் வங்கிகளை கண்காணிப்பது என்பது ஒப்பீட்டளவில் கடினமான ஒன்றாகும் எனவே அதற்கென கண்காணிப்பு குழுக்களை அமைப்பதற்கு முடிவேடுத்துள்ளோம். மற்றும் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தல் பணவீக்க நிலையை சீரமைத்து துறைமுக நகரம் மற்றும் கைத்தொழில் வலையத்தின் செயற்பாடுகளூடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உற்பாய்சல்களை அதிகரித்தல் என்பன தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் எனவும் பண்நாட்டு கொடுக்கல் வாங்கல்களை அறிக்கை படுத்துவதற்கான முறையினை 2022 ஜனவரி 1ம் திகதி முதல் நிறுவப்படும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் தெரிவித்துள்ளார்.
"we will be outcome oriented" நாங்கள் விளைவு சார்ந்தவர்களாக இருப்போம் என அவர் தனது உரையில் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.