‘இருதரப்பு முடிவுகள் தொடர்பில் இரு நாடுகளின் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என இந்திய வெளிவிவகாரச் செயலரிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான 60 மற்றும் 70ஆம் நூற்றாண்டுத் தொடர்புகளை மீளக் கட்டியெழுப்புதல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்றல், இலங்கையின் நிலைப்பாட்டுக்கு இந்தியா வழங்க வேண்டிய உதவி, இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு என்பவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினதும் மக்களுக்கு சரியான முறையில் தெளிவுப்படுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்களிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வலியுறுத்தினார்.
நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் இன்று (05) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில், 1960, 1970ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட நட்புணர்வு மற்றும் தொடர்புகளை மீளக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றி, ஜனாதிபதி அவர்கள் தெளிவுபடுத்தினார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.