இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் , அது திருப்தியற்றதாகவுள்ளதாகவும், எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பால்மா தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுமெனவும், இலங்கை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது நீக்கப்பட்டுள்ள பால்மாவிற்கான இறக்குமதி வரி நிதியமைச்சினால் மீண்டும் அறவிடப்பட்டால் அதன் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடுமென அவர் எச்சரித்துள்ளார்.
உலக சந்தையில் பால்மாவின் விற்பனை விலை அதிரிக்கப்பட்டதை தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை தேசிய மட்டத்தில் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், பால்மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து விற்பனை விலையை தீர்மானிக்கும் அதிகாரம் இறக்குமதியாளர் சங்கத்தினருக்கு உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 350 ரூபாவினாலும், 400 கிராம் பால்மா பைக்கட்டின் விலையை 140 ரூபாவினாலும் அதிகரிக்க கோரிக்கை விடுத்தாகவும், எனினும் கிலோகிராம் பால்மாவினை 250 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவை 100 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விலை அதிகரிப்பும் திருப்தியற்றதாக உள்ளது எனவும், புதிய விலைக்கு அமைய ஒரு கிலோகிராம் பால்மாவை விற்பனை செய்யும் போது 80 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவை விற்பனை செய்யும் போது 32 ரூபாவினாலும் நட்டமடைய நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பால்மாவிற்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கருத்திற் கொண்டே பால்மாவின் விலை அதிகரிப்பை 140 ரூபாவினால் குறைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விலையேற்றத்தை தொடர்ந்து மீண்டும் வரி அறவிடப்பட்டால் பால்மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.