அத்தியவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியாது போயுள்ளமை தொடர்பான பொறுப்பை ஏற்று அமைச்சரவை உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் சந்தையின் கட்டுப்பாட்டை வியாபாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.
அரசாங்கம், பால் மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலை கட்டுப்பாட்டை அரசாங்கம் நீக்கியுள்ளது.
அரசாங்கம் விலை கட்டுப்பாட்டை நீக்கியுள்ளதால், இவற்றை சந்தைப்படுத்தும் வர்த்தகர்கள், செய்தியாளர் சந்திப்பை நடத்தி அவற்றின் விலைகள் குறித்து அறிவிக்கலாம்.
இப்படி வர்த்தகர்கள் பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பார்கள் என்றால் எதற்கு அரசாங்கம். இது தொடர்பில் முழு அமைச்சரவையும் வெட்கப்பட வேண்டும்
பால் மா, கோதுமை மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து, பருப்பு, டின் மீன் ஆகிய அத்தியவசிய பொருட்களின் விலைகளை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த அத்தியவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியாது என்றால், எதற்கு அரசாங்கம்?. அரசாங்கம் ராஜினாமா செய்து வீட்டுக்கு செல்வது இதனை விட சிறந்தது.
நாளைய தினத்தில் இருந்து பால் மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு என்பன தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.
பொருட்களின் விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரம் கிடைத்த பின்னர், பொருட்களின் விலைகளை அதிகரித்து தட்டுப்பாடு இன்றி வியாபாரிகள் பொருட்களை சந்தைக்கு வழங்குவர்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் வெளியில் வரும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.