எரிவாயு, சீமெந்து, பால்மா போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விருப்பத்துக்கு ஏற்ப வானளாவிய உயரத்துக்கு அதிகரித்துச் செல்லும் போது அதனைக் கட்டுப்படுத்த முடியாது எனச் சொல்லுவதாயின் அரசாங்கம் எதற்கு என ஐக்கிய மக்கள் சக்தயின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த அரசாங்கத்துக்கு நாட்டை கட்டியெழுப்புவதை விடுத்து குறைந்தபட்சம் பொருளாதாரத்தைக் கூட முகாமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதை நன்றாக நிரூபித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ''எதிர்க்கட்சியிலிருந்து மூச்சு ' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் சமூக நலத்திட்டத்தின் 31ஆவது கட்டமாக 20 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த அத்தியாவசிய மருத்துவமனை உபகரணங்கள் தந்திரிமலை பிரதேச மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளில் இருந்து மக்களை மீட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கையை சுமுகமாகப் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான திறன் அரசாங்கத்திடம் இல்லை.
அதை ஏற்றுக்கொண்டு உடனடியாக விலகி இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய குழுவிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
மக்களுக்கான அனைத்து வருமான வழிகளும் தடுக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் நாட்டில் போசாக்குக் குறைபாடு அதிகரித்து வருவதாகவும் மக்கள் ஆதரவற்ற நிலையில் உள்ளது.
சுமார் 13 வருடங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் அலுவலகமொன்றை திறந்து வைக்கும் மக்கள் சந்திப்பின் போது பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி காலஞ்சென்ற புகழ்மிக்க இராணுவ வீரரான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா (Janaka Perera) உள்ளிட்ட இருபத்தொன்பது பேர்களின் நினைவாக நடைபெற்ற ஞாபகார்த்த வைபவத்தில் இணைந்து கொண்டு மருத்துவமனை உபகரணங்களை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா (Janaka Perera) உள்ளிட்ட காலஞ் சென்றவர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.