இலங்கையின் பணமதிப்பும் மிகக்குறைவாக இருக்கிறது. இதனால் வெளி நாடுகளில் இருந்து எந்த பொருள் வாங்கவேண்டும் என்றாலும் இலங்கை பணத்தை அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கிறது.
இலங்கைக்கு பெரும்பாலான வருமானம் சுற்றுலா துறை மூலமே வருகிறது. கொரோனா பாதிப்பால் ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் மிகவும் நலிவடைது இருந்த நிலையில் சுற்றுலா பயணிகளும் வராததால் வருமானம் இல்லாமல் தவிக்கிறது.
இலங்கையிடம் ஏற்கனவே அன்னியசெலாவணி மிகக் குறைவாக இருந்தது. வருமான வீழ்ச்சியால் அது மேலும் சரிந்தது.
இதனால் கடந்த ஒரு வாரத்தில் அன்னிய செலாவணி இருப்பு பாதியாக குறைந்துவிட்டது. தற்போது சுமார் ரூ.27 ஆயிரம் கோடி மட்டுமே அன்னிய செலாவணி இருப்பில் உள்ளது. இதை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் எல்லா செலவுகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
எனவே போதிய அன்னிய செலாவணி இலங்கையிடம் இல்லை. இந்த நிலையில் பெட்ரோல்-டீசலின் மூலப் பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பணம் இல்லாமல் இலங்கை தவிக்கிறது. எனவே கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக இந்தியாவிடம் இருந்து ரூ.3,600 கோடி கடன் கேட்டுள்ளது. இலங்கையில் சிலோன் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனம் தான் எண்ணெய் இறக்குமதியை செய்கிறது. அந்த நிறுவனம் ஏற்கனவே 2 வங்கிகளில் ரூ.17 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி உள்ளது.
இனிமேலும் கடன் கிடைக்கும் சூழ்நிலை அங்கு இல்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவு பீப்பாய் 84 டாலர்களாக உயர்ந்தது. எனவே தான் இந்தியாவில் கடன் கேட்கிறார்கள். இதுசம்பந்தமாக இருநாட்டு பிரதிநிதிகள் இடையேயான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்பட இருப்பதாக இலங்கை நிதி செயலாளர் அட்டிகல்லே தெரிவித்துள்ளார்.