நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை அளவில் இணங்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கமவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், விஜித்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையை நீக்குவது தொடர்பில் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள பிரதமர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஐக்கிய தேசிய முன்னணியை இந்த விடயத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அதற்காக குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி, அதன் நிலைப்பாட்டை எதிர்காலத்தில் அறிவிப்பதாக பிரதமர் தம்மிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்றைய பேச்சுவார்த்தையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான நடவடிக்கையில் சாதகமான நிலைமை இருந்ததாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் விஜித்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.