நாட்டில் அரிசி மீதான 65 ரூபா வரியை 20 ரூபாவாக அரசாங்கம் குறைத்தால் அரிசியை இறக்குமதி செய்யத் தயாரென அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் கீரி சம்பா கிலோ ரூ.225 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வரி குறைக்கப்பட்டால் இந்தியாவிலிருந்து கீரி சம்பா, பொன்னி சம்பாவை தட்டுப்பாடின்றி இறக்குமதி செய்து ரூ.130-135க்குள் செலுத்த முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதோடு தற்போது நிலவும் உர நெருக்கடி காரணமாக இந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலையில் நாடு முழுவதும் துப்பாக்கி ஏந்தியும், சோதனை நடத்தியும் நுகர்வோர் சந்தையில் தேவையான அளவு அரிசியை வாங்க முடியவில்லை என்றால் அதற்கு தற்போதைய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் நாட்டில் அரிசி நெருக்கடியைப் போக்க அரிசி இறக்குமதியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.