பல மாதங்களுக்கு பின்பு பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். அவர்கள் மனதை மகிழ்விக்கும் விதமாக மாணவர்களின் புன்னகையை மீண்டும் பார்ப்பதற்காக தங்களை அர்ப்பணித்து செயலாற்றி அனைவரது மனங்களில் இடம் பிடித்துள்ளனர் கொழும்பு இராமகிருஷ்ணா வித்தியாலயத்தின் நிர்வாக குழு.
ஒக்டோபர் 1 இலங்கை முழுவதும் ஊரடங்கில் முடங்கி இருந்ததால் எந்த பாடசாலைகளும் சிறுவர் தினத்தை கொண்டாட முடியாது தவித்தது. சில பாடசாலைகள் ஓன்லைனில் கொண்டாடியது. கொழும்பு இராமகிருஷ்ணா வித்தியாலயமும் ஓன்லைனில் கொண்டாடியது. இருப்பினும் இளஞ்சிட்டுக்களின் மழலை கொஞ்சும் சிரிப்பின் அடையாளத்தை வெளிக்கொண்டு வருவதற்காக கொழும்பு இராமகிருஷ்ணா வித்தியாலயம் இன்று தரம் 1 தொடக்கம் 5 வரை மாணவர்களுக்கு சிறுவர் தின விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இனிதே ஆரம்பமான சிறுவர் தின விழாவில் ஏராளமான மாணவர்கள் அவர்களின் தனித் திறமைகளை கூச்சமின்றி மேடையேறி நம் கண்களுக்கு விருந்தாக அமையும் வகையில் சிறப்பாக வெளிகாட்டினார்கள்.
மாணவ செல்வங்களின் ஆட்டம் பாட்டம் என அந்த மண்டப அரங்கமே சந்தோஷத்தில் மூழ்கியது.
திறமையுள்ள பல மாணவர்களை இனங்காணக்கூடியதாக அமைந்தது இவ் விழா.
கலைகட்டிய மழலை கொஞ்சும் இளஞ்சிட்டுக்களை இறக்கை விரித்து பறக்க இடமளித்த இந்த பாடசாலை நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள் கூறுவது மட்டும் போதாது அவர்களை பாராட்டவும் வேண்டும்.
இந் விழாவில் மாறு வேட நிகழ்ச்சி உட்பட பல அழகான நிகழ்ச்சிகள் அரங்கேறியது. இப்பாடசாலையில் சிறந்த பல பாடகர்கள், நடனகாரர்கள் மற்றும் பல திறமைசாலிகள் மறைந்துள்ளனர். அவர்களுக்கான சிறந்த களத்தை அமைத்து இந்நிகழ்வை சிறப்பாக நடாத்திய இப்பாடசாலையின் அதிபர் செல்வி ராஜமாலினி சின்னையா அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள் வழங்கியாக வேண்டும்.
பின் தள்ளப்பட்ட இப்பாடசாலையின் மாணவர்களுக்காக சிலர் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கும் நிலையில் இன்று வெள்ளவத்தை ரோட்ராக்ட் கிளப் இப்பாடசாலையில் கல்வி பயிலும் இரு மாணவர்களுக்கு Tab இலத்திரனியல் வசதியை வழங்கினார்கள். மற்றும் வெள்ளவத்தை நித்தியக்கல்யாணி உரிமையாளர் மாணவர்களுக்காக முககவசங்களை வழங்கினார். அவர்களுக்கும் பாராட்டுக்கள் வழங்கியாக வேண்டும்.
இந்நிகழ்வு மிக மகிழ்வாக இனிதே நிறைவடைந்தது.