காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரதத்திற்கு பரிகாரம் காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவிற்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது கோட்டாபயவால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், கோட்டாபய மற்றும் மஹிந்த ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டிருந்தனர்.
அதனடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையினால் குறித்த சந்திப்பிற்கான திகதி தீர்மானிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், நேற்றைய சந்திப்பில் குறித்த விவகாரம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடிய கோட்டாபய, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் விவகாரத்தினை தீர்த்து வைக்கும் வகையிலான கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
உறவுகள் காணாமல் போனதினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளை கவனத்திலெடுத்து அவற்றினை தீர்ப்பதற்கும், தேவையான பரிகாரங்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக கோட்டாபாய ராஜபக்ஷ, இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.