கொத்துரொட்டி வாங்குவதற்காக சென்ற 26 வயது இளைஞர் ஹோட்டல் உரிமையாளரினால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காலி பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பத்தேகம, நாகொட பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு கொத்துரொட்டி வாங்குவதற்காக நேற்றிரவு 11.30 மணியளவில் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது இளைஞருக்கும் ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கோபத்தில் ஹோட்டலிலிருந்து வெளியேறிய இளைஞர், தனது வீட்டுக்குச் சென்று கூரிய ஆயுதமொன்றை எடுத்துச்சென்று ஹோட்டல் உரிமையாளரை தாக்கியுள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஹோட்டல் உரிமையாளரும் அவரது மகனும் இணைந்து குறித்த இளைஞர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மோதலில் படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் தொடர்பில் ஹோட்டல் உரிமையாளரின் மகனை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.