தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் பெண்ணொருவருடன் இணைந்து ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய நேற்றிரவு குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹுங்கம காவல் நிலையத்தில் பணியாற்றி வரும், அம்பலாந்தோட்டை – கொக்கல பகுதியைச் சேர்ந்த 32 வயதான காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 41 வயதான பெண்ணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பெண்ணுடன் சந்தேகநபரான கான்ஸ்டபிள் திருமணத்துக்கு அப்பாலான உறவைப் பேணி வந்துள்ளார் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 28 கிராம் 580 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.