இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 840 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
கடந்த ஆண்டில் மொத்தமாக 732 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை 840 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போதைப்பொருள் வர்த்தகத்தில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக அவர் கூறியுள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நச்சுத்தன்மை மிக்க போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த 31 வெளிநாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெற்கு கடற்பரப்பில் பாதுகாப்பு தரப்பினர் நேற்று மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 107 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 120 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சிறைப்பிடிக்கப்பட்ட குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், குறித்த கப்பலில் கைது செய்யப்பட்ட ஒன்பது ஈரானியர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.