சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 217 குடும்பங்களைச் சேர்ந்த 78,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் உயிரிழதுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளதாக புத்தளம் மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள அதே நேரம், தற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
21 தற்காலிக முகாம்களில் 1637 குடும்பங்களைச் சேர்ந்த 5234 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சமைத்த உணவு, குடிநீர் வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் என்பன பிரதேச செயகங்கள் ஊடாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
மேற்படி 21 தற்காலிக முகாம்களிலும் அரச திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து, பொலிஸார், முப்படையினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டுமன்றி, நகர சபை, பிரதேச சபை தலைவர்களும் தமது உத்தியோகத்தர்களை மேற்படி பணிக்கு அமர்த்தி உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதேவேளை, குறித்த வெள்ள அனர்த்தத்தினால் புத்தளம் மாவட்டத்தில் நான்கு பேர் மரணமாகியுள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு காணாமல் போன இருவரையும் மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வண்ணாத்தவில்லு, மஹாகும்புக்கடவல மற்றும் ஆனமடுவ , முந்தல் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே வெள்ளத்தில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், முந்தல் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், வெள்ளத்தினால் ஏற்பட்ட சொத்து சேத விபரங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.