web log free
January 12, 2025

களனிவெலி பெருந்தோட்ட நிறுவன அமைச்சர் அதிரடி முடிவு

கேகாலை மாவட்ட களனிவெலி பெருந்தோட்ட நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்களில் நிறுவனம் தொழில் சட்டங்களுக்கு முரணாக செயற்படுவது தொடர்பாக தனக்கு விரிவான அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

களனிவெலி பெருந்தோட்ட கம்பனி மிகவும் மோசமான வகையில் தொழிலாளர் சட்டங்களை மீறுவதுடன் தோட்ட தொழிலாளர்களை மிகவும் துன்புறுத்துகின்றது என அந்த தோட்டத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நேரில் சந்தித்த பொழுது களனிவெலி நிறுவனம் மிகவும் மோசமான முறையில் தொழில் சட்டங்களை மீறுவது தொடர்பாக அமைச்சருக்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் அவருடனான கலந்துரையாடலின் பொழுது தெளிவுபடுத்தினர்.

கேகாலை மாவட்டத்தில் களனிவெலி பிளான்டேசன் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பனாவத்தை, அல்கொல்லை, லெவன், கனேபல்ல, வீஒயா, கிரிபோருவ, களனி, தேவாலகந்த, கிதுல்கல, இங்ஒயா, உறுமிவல, எதிராபொல மற்றும் கலுபான ஆகிய பெருந்தோட்ட பகுதிகளிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் சார்பாக அதன் பிரதி நிதிச் செயலாளர் ஜி.ஜெகநாதன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக டி.அருளப்பன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஏ.கிருஸ்ணகுமார், இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தின் சார்பில் சந்திரசேன, இலங்கை தோட்ட மற்றும் தொழில் சேவையாளர் சங்கத்தின் சார்பில் டி.மாரிமுத்து மற்றும் தொழில் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அகில கயான் கௌசல்ய ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தொடர்ந்து அமைச்சருக்கு விளக்கமளித்த பொது,

ஞாயிற்றுக்கிழமை தொழில் புரிகின்ற தொழிலாளர்களுக்கு தொழில் சட்டங்களின் படி ஒன்றரை நாட்களுக்கான வேதனத்தை பெற்றுக் கொடுக்க மறுக்கின்றமை நாட்கூலிகளாக தொழில் புரிகின்றவர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்க வேண்டிய ஆகக் குறைந்த வேலை நாட்களை வழங்க மறுக்கின்றமை. தேயிலை மற்றும் இறப்பர் பெற்றுக் கொடுக்க வேண்டிய கிலோவின் அளவை அதிகரித்துள்ளமை. ஒரு நாள் வேலையை அரை நாள் வேலையாக பதிவு செய்கின்றமை. நாட் சம்பளமாக தொடர்ந்தும் 700 ரூபாவாக வழங்கப்படுகின்றமை. அதே நேரம் தோட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய வேலைகளான உரிய நேரத்திற்கு பசளைகள் இடாமை உரிய முறையில் பராமரிக்காமை. தொழிலாளர்களின் வீடுகளை திருத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை. தொழிலாளர்களின் நலன்புரி சேவைகளை முன்னெடுக்காமை. போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்டு வந்ததுடன் இது தொடர்பாக தமக்கு நியாயமான தீர்வு ஒன்றையும் பெற்றுத் தருமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும் தொழிற்சங்க சந்தாவை அறவிடுவதை இடை நிறுத்தியுள்ளமை. இது தவிர தொழில் ஆணையாளர் காரியாலத்தின் ஆணையாளர் இன்னும் பல விடயங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டி அவை தொழில் சட்டங்களுக்கு முரணாக அமைந்துள்ளதாக தெரிவித்ததுடன் அவற்றை தொழில் சட்டங்களுக்கு அமைய திருத்துமாறு தொழில் ஆணையாளர் களனிவெலி நிறுவனத்தை கோரியிருந்தாலும் அது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுப்பதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் இது தொடர்பாக உரிய தீர்வு ஒன்றை பெற்றுத் தருமாறும் கோரிக்கை ஒன்றை தொழிற்சங்க பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

இந்த விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை ஒன்றை பெற்றுத் தருமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளதுடன். இந்த விடயம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளையும் களனிவெலி நிறுவனத்தின் அதிகாரிகளையும் அழைத்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டு உடனடியாக தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்திக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் தற்பொழுது பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கு முடிவிற்கு கொண்டு வரப்பட்ட உடன் தொழிலாளர்களின் தொழில் உரிமை உட்பட ஏனைய விடயங்கள் தொடர்பாக புதிய தொழில் சட்டங்களை உருவாக்குவதற்கு தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd