நாட்டில் அதிகரித்துள்ள விலையேற்றத்தை கண்டித்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்று காலை 9 மணிக்கு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினுடைய உறுப்பினர்கள் பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் மாட்டு வண்டிலில் அதிகரித்த விலைக்குரிய பொருட்கள் சிலவற்றை ஏற்றியவாறும் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாட்டில் அதிகரித்துள்ள சமையல் எரிவாயு விலை, சீனி விலை, சீமெந்து விலை உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் உரப்பிரச்சினைக்கு எதிராகவும் குறித்த கவனயீரப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "ஏற்றாதே எற்றாதே பொருட்களின் விலையை ஏற்றாதே, அடிக்காதே அடிக்காதே ஏழை வயிற்றில் அடிக்காதே, அடிக்காதே அடிக்காதே காசுகளை அடிக்காதே, விற்காதே விற்காதே நாட்டை விற்காதே" உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வரை பேரணியாக சென்றனர்.
பேரணியாகச் சென்றவர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளரிடம் இந்த விடயம் தொடர்பில் மனு ஒன்றையும் கையளித்தனர்.