web log free
January 12, 2025

மேலும் ஒரு உயிரை காவுகொண்ட வெலிசற விபத்து

16 வயது சிறுவன் விபத்தை ஏற்படுத்திய விவகாரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உயிரிழந்தார்.

வெலிசறை, மஹபாகே பிரதேசத்தில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளாா்.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வருடம் உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளாா்.

16 வயது சிறுவனால் ஓட்ப்பட்ட கார் ஒன்று வெலிசறை பிரதேசத்தில் மேலும்சில வாகனங்களுடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தின்போது, மோட்டாா் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த பாடசாலை மாணவன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளாா். உயிரிழந்த மாணவன் பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சிசென்ற அவரின் உறவினரான 52 வயது நபர் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். அவர் முன்னாள் இராணுவ சிப்பாய் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரின் தந்தை ஆகியோா் வத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மஹபாகே பிரதேசத்திலுள்ள தங்க ஆபரண வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான குறித்த அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அவரின் 16 வயது பாடசாலை செல்லும் மகனே இந்த காரை ஓட்டியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Thursday, 11 November 2021 11:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd