மூன்று வீடுகளை இணைத்து கட்டப்பட்ட வீட்டில் தான் இருந்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக முன்னாள் ஜனாதிபதியும் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் அளுத்கமகே தெரிவித்த கருத்துக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
சபாநாயகரின் அனுமதியுடன் விசேட அறிக்கையொன்றில் முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடமிருந்து இந்த வீட்டை தாம் பெற்றதாகவும், பயன்படுத்திய வீட்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அளுத்கமகே விஸ்கி அருந்துவதைக் காணக்கூடிய ஒரு கலந்துரையாடல் பற்றி குறிப்பிட்டதாகவும் சிறிசேன கூறினார். நான் மது அருந்துபவர் அல்லது புகைப்பிடிப்பவர் அல்ல என்பதை அவருக்கு நினைவூட்ட வேண்டும் என சிறிசேனா கூறினார்.
மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையின் பின்னர் கருத்து தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் ஜனாதிபதியின் உரை தொடர்பில் எதிர்காலத்தில் கருத்து வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.