அந்நிய செலாவணி மாற்று வீதத்தில் அதாவது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பீடு பாரிய அளவிலான வர்த்தக தளம்பலை ஏற்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 285 ரூபாய் ஒரு டாலர் என்ற அடிப்படையில் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதி செலவுகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரிகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை விட அரச செலவினங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு தற்பொழுது கவலை அளிக்கின்ற நிலையிலேயே இருக்கின்றது.
புதிது புதிதாக அறிவிப்புகள் செய்யப்பட்டதால் இறக்குமதி தடைகளும் கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்ந்து கொண்டே போகின்றது.
நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரம் சீராக கையாளப்படாத காரணத்தினால் அரசாங்கம் நிறைய கடன்களை வாங்குகிறது. இதனால் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை சமாளிப்பதற்கு ஏற்கனவே வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன்களை அதிகமாக விதிப்பதற்கான கட்டாய நிலைமைகளில் தள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் சவால்கள் ஏற்படும் அளவிற்கு பெருந்தொகை பணம் அச்சடிக்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் பதவிக்கு வந்த பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொட்டகலையில் இராணுவத்தினருக்கு 10 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இருந்த காலத்தில் அங்குள்ள மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காணிகள் இன்று இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.