web log free
January 12, 2025

அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க தடை

அரசாங்க ஊழியர்கள் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்ககூடாது என உத்தரவு வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே இந்த உத்தரவை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

உள்துறை இராஜாங்க அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும்; கருத்துக்களை வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர்கள் கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்தே அரசாங்கத்திடமிருந்து இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

அரசசேவைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை பதிவிடுவோருக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கும் சுற்றுநிரூபமொன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவு செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக தகவல்தொழில் நுட்ப நிபுணர்களின் உதவியுடன் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச செயலாளர்கள் தங்களிற்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களிற்கு இது குறித்து அறிவுறுத்தவேண்டும் என உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துக்கள் அதிகரிக்கின்றன சிரேஸ்ட அமைச்சர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றனர் கிராமசேவையாளர்களே அதிகளவு விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Tuesday, 23 November 2021 11:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd