களுத்துறை – கல்பாத்த பிரதேசத்தில், மதுபோதையில் பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் மேலும் சிலருடன் கல்பாத்த பகுதிக்கு வந்து மது அருந்தியுள்ள நிலையில், அங்கிருந்து கல்பாத்த, பஹுருபொல பிரதேசத்துக்கு அவர் தனியாக சென்று பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கிருந்த பிரதேசவாசிகள், குறித்த பிரதேச சபை உறுப்பினரை மின்கம்பத்தில் கட்டி வைத்து, காவல்துறை அவசர பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.
அழைப்பின் பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்து, நாகொட வைத்தியசாலையின் வைத்தியர் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது, அவர் மது அருந்தியிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில், சந்தேக நபரை நேற்று (22) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.