யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம், விடுதலைப் புலிகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் அதன் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் பங்கேற்றதாக வெளியான ஊடகச் செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ‘கார்த்திகை வாசம்’ நிகழ்வை ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் சனிக்கிழமை (20) நியங்கல மலர் (கார்த்திகைப்பூ) அணிவித்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
தமிழ் தேசிய பசுமை அமைப்பு (TNGO) வடக்கு மர நடுகை மாதத்தை முன்னிட்டு, இந்திய துணைத் தூதரகம் உட்பட பல பங்கேற்பாளர்களை அழைத்து ‘கார்த்திகை வாசம்’ என்ற நிகழ்ச்சியை அரங்கேற்றியது.
நிகழ்வின் ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, மரம் நடும் மாதத்தை முன்னிட்டு, விருந்தினர்கள் நியங்கலா மலர்களை அணிந்து கொண்டனர். அவர்களுக்கு இலவச நாற்றுகள் மற்றும் மலர்கள் வழங்கப்பட்டன.
இதனிடையில், நியங்கல மலர் (கார்த்திகைப்பூ) முன்னர் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ மலராக பயன்படுத்தப்பட்டதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறவிருந்த மாவீரர் நாளுக்கு முந்தைய மாவீரர் வாரத்தை முன்னிட்டு நடத்தப்படும் நினைவேந்தல்களுக்கு நவம்பர் 21 முதல் 28 ஆம் திகதி வரை பல மாவட்ட நீதிமன்றங்கள் தடை விதித்திருந்த நேரத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் சர்ச்சைக்குரிய ஊடகச் செய்திகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
“2021 நவம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இந்திய துணைத் தூதரகத்தினால் பசுமைக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தது மற்றும் தாவர மரக்கன்றுகளை விநியோகித்தது தொடர்பாக பல தவறான ஊடகச் செய்திகளைக் கண்டோம். அழைப்பின் பேரில் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இது பற்றி அவருக்கு முன் தகவல் ஏதும் தெரியாது, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என ஆங்கில மொழி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.