குறிஞ்சாங்கேணி குளத்திற்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தை 9 மாதங்களுக்குள் கட்டி முடிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிறேமசிறி ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (நவம்பர் 25) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நவம்பர் 23 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கிண்ணியா குறிஞ்சாங்கேணி குளத்தில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோசமான சம்பவம் நடந்தபோது படகு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
தற்போதுள்ள குறிஞ்சாங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை கிண்ணியா நகர சபையினால் படகு சேவை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் தொடர்பில் குறித்த பயணிகள் படகு உரிமையாளர் மற்றும் இரண்டு நடத்துனர்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் டிசம்பர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா நகர சபையின் தலைவரும் இன்று மாலை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் டிசம்பர் 09 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.