சீரற்ற காலநிலையால் இலங்கையின் பல மாவட்டங்களில் உள்ள மக்கள் அவதிப்படும் நிலையில், மன்னார் மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். மன்னார் மாவட்டமானது கடல் மட்டத்திலே இருப்பதால் மழை நீர் வெளியேற வழியில்லாமல் கிராமத்திற்குள்ளே தேங்குகின்றது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட அசௌகரியங்களினால் மன்னார் நகர் பகுதி, தாழ்வுபாடு, பேசாலை, துள்ளுக்குடியிருப்பு, வசந்தபுரம், தலைமன்னார் ஆகிய அனைத்து பகுதிகளில் வாழும் விவசாயிகள் உட்பட அனைத்து மக்களும் தற்காலிக முகாம்களில் அதாவது பாடசாலைகளிலும் பொது கட்டடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் ஓலைத்தொடுவாய் பகுதியில் மலசல கழிவுகள் நீரில் மிதக்கின்றன. உடனடியாக இந்த பிரச்னைகளுக்கு தீர்வு வழங்குமாறு இன்று பாராளுமன்றத்தில் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மன்னார் மக்கள் சார்பில் கோரிக்கையை முன்வைத்தார்.