web log free
January 13, 2025

ஒமிக்ரோன் வைரஸின் 7 கூறுகள்! மக்களின் கவனத்திற்கு!

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் திரிபு, தற்போது உலகம் முழுவதும் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொவிட்-19 வகை பிறழ்வான ஒமிக்ரோன் திரிபு தொடர்பான ஏழு முக்கிய காரணிகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர வெளிப்படுத்தியுள்ளார்.

ஒமிக்ரோன் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புக்கு அமைவாக இவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்படி, ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் 7 முக்கிய கூறுகள் பின்வருமாறு:

1. பரவும் முறை : ஒமிக்ரோன் திரிபின் பரவும் திறன் டெல்டா உட்பட மற்ற வகைகளை விட வேகமாக பரவும் (உ+ம் - ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும்).

2. நோயின் தீவிரம் : டெல்டா உள்ளிட்ட பிற பிறழ்வுகளுடனான நோய்த்தொற்றுகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் வைரஸ் மிகவும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்துமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

3. முன்னர் அடையாளம் காணப்பட்ட கொவிட் பிறழ்வுகளின்படி நோய்த்தொற்றின் விளைவு : ஏனைய கொவிட் வகைகளுடன் ஒப்பிடும்போது, இதற்கு முன்னர் கொவிட் தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு அதிகம் என்பதாக ஆரம்ப பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4. தடுப்பூசிகளின் செயல்திறன் : டெல்டா உட்பட கடுமையான நோய் மற்றும் இறப்புக்களைக் குறைப்பதில் தடுப்பூசி முக்கியமானது. தற்போதைய தடுப்பூசிகள் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக செயற்படும். (மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன)

5. தற்போதைய பரிசோதனைகளின் அமைவாக நோய்பாதிப்பு : பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகள் ஊடாக, ஒமிக்ரோன் நோய்த்தொற்றுகள் உட்பட, தொற்றுநோய்களைக் கண்டறிவது தொடருவோம்.

6. தற்போதைய சிகிச்சையின் செயல்திறன் : COVID-19 நோயால் பாதிக்கப்பட்ட கடுமையான நோயாளிகளை நிர்வகிப்பதில் Corticosteroids மற்றும் IL6 Receptor Blockers இன்னும் பயனுள்ளதாக இருக்கும். ஒமிக்ரோன் திரிபில் உள்ள வைரஸின் கூறுகளில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து, அவை இன்னும் பயன் உள்ளதா என்பதை பார்க்க ஏனைய சிகிச்சைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

7. ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் : புதிய கொவிட் பிறழ்வுகளை அடையாளம் காண மேற்கொள்ளப்பட்டு வரும் மரபணு ஆராய்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த 7 விடயங்களுக்கு மேலதிகமாக, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேராசிரியர் சந்திம ஜிவந்தர கவனம் செலுத்தியுள்ளார்.

அதன்படி, 2 நபர்களிடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை முன்னெடுத்தல், தரமான முகக்கவசம் அணிதல், நல்ல காற்றோட்டத்திற்காக ஜன்னல் போன்றவற்றை திறந்து வைத்தல், காற்றோட்டம் அற்ற அல்லது ஜன நெரிசலான இடங்களைத் தவிர்த்தல், கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல், தும்மல் அல்லது இருமல் வரும்போது முழங்கையைப் பயன்படுத்தல், அல்லது சுத்தமான துணியால் மூக்கை மூடிக்கொள்ளல், மற்றும் கொவிட் வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பெற்றுக் கொள்வது குறிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

Last modified on Tuesday, 30 November 2021 15:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd