கடந்த 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தந்தவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
குறிப்பாக புதிய கொரோனா வைரஸ் பிறழ்வான ஒமிக்ரோன் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுமென அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இராஜாங்க அமச்சர் இதனை குறிப்பிட்டார்.
கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் செயற்பாட்டினூடாக, தொற்று பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்ற நிலையில், ஒமிக்ரோன் வைரஸ் பிறழ்வானது தென்னாபிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த வைரஸ் பிறழ்வானது ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருக்கும் தொற்றக்கூடும் என அவர் தெரிவித்தார். இந்த வைரஸ் பிறழ்வு தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், நாட்டிற்கு வருகை தரும் வௌிநாட்டவர்களுக்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.