அமெரிக்காவுடன் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அவர், இதனை வலியுறுத்தியிருக்கின்றார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘2018 ஓகஸ்ட் 28ஆம் திகதி சோபா ஒப்பந்தம் தொடர்பான வரைவு ஒன்றை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
அதன்படி, அமெரிக்க இராணுவத்தினர் கடவுச்சீட்டு இல்லாமல், அமெரிக்க அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்துடன் இலங்கைக்குள் நுழைய முடியும்.
இந்த உடன்பாட்டுக்கு ஒப்பந்தத்துக்கு அமைய இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க படையினரை இலங்கை அதிகாரிகள் சோதனையிட முடியாது.
இலங்கைக்குள் நுழையும் அமெரிக்க கப்பல்களை சோதனையிடும் உரிமையும் இலங்கை அதிகாரிகளுக்கு இருக்காது.
அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது. அதிலுள்ள சில பிரிவுகள் உள்நாட்டுச் சட்டங்களுக்கு எதிரானது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது.”என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.