web log free
November 25, 2024

“வெளிநாட்டு சக்திகளுக்கு இங்கு இடமில்லை”

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான எந்தவொரு யோசனையையும், நிச்சயமாக நடைமுறைப்படுத்தமாட்டேன். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல அறிக்கைகள் தவறானவை. சரியானதை மாத்திரம் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் தவறானவற்றை நிராகரிக்கும்.

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர், சில குழுக்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார். அவரது அறிக்கையில் காணிகள் விடுவிப்பு தொடர்பாக கூறப்பட்டுள்ள பரிந்துரையை நான் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் எடுத்து முடிவு பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு அறிவிக்காமலேயெ, பெப்ரவரி 25ஆம் திகதி, ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதுவர் தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதனை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கை எனது தலையீட்டுடன் தான் வரையப்பட்டது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான கலப்பு விசாரணைக்கு உறுதியான எதிர்ப்பு தெரிவிப்பதே அதன் நோக்கம்.

இலங்கைக்கு வெளிநாடுகளுடனான உறவுகள் முக்கியம். ஆனால், வெளிநாட்டு சக்திகளை இங்கு அதிகாரம் செலுத்த அனுமதிக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:50
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd