2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பில் வெற்றிப்பெறுவதற்கு ஆட்சியில் உள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஏனைய சில தரப்பினரும் ஆதரவாக வாக்களிக்க வேண்டிய தேவை உள்ளது.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளுடன், செயற்படுகின்ற நிலையில் இறுதி வாக்கெடுப்பில் ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது எதிராக வாக்களிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்திருந்தபோதும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்றிருக்கவில்லை.
இந்த நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இறுதி வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்க உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், இம்முறை வாக்கெடுப்பில் எவ்வாறு செயல்படுவார்கள் என்பது தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.