காலி கடற்பரப்பில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்கு சர்வதேச புலானய்வுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செய்மதி தொலைபேசி மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் தொடர்பான விசாரணைகளுக்காகவே சர்வதேச புலானய்வுப் பிரிவுகளின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.
குறித்த செய்மதி தொலைபேசிக்குக் கிடைத்த அழைப்புகள், குறித்த தொலைபேசியிலிருந்து தொடர்புகொண்ட அழைப்புகள் குறித்து விசாரணை செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள் யார் என்பது தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து, பாகிஸ்தானிலுள்ள ஈரானிய பிரஜை ஒருவரே இந்த கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளமையும் இந்த கடத்தல் நடவடிக்கையானது, நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
கடந்த 24 ஆம் திகதி காலி கடற்பிராந்தியத்தில் 1,072 மில்லியன் ரூபாய் பெறுமதியான 107 கிலோ 22 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன், ஈரானிய பிரஜைகள் 9 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.