13 வயது யோகராசா நிதர்ஷனாவுக்கு என்ன நடந்தது?
முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
சிறுமி கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் நால்வரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஜோடிக்கப்பட்ட கதைகள்
கடந்த வாரம் 15 ஆம் திகதி காணாமற்போன நிதர்சனா, கொலை செய்யப்பட்ட நிலையில் 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக குடும்பத்தினர் ஆரம்பத்தில் கூறியிருந்தனர்.
ஆனால் இந்தக் கதைகள் எல்லாம் ஜோடிக்கப்பட்டவை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நிதர்சனா அக்காவின் கணவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின் போது சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை உறுதி செய்த பொலிஸார் நிதர்சனாவின் தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவரை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
நிதர்சனாவின் தாய் இதுவரை மௌனம் கலையாத போதிலும், அவரது தந்தை நடந்த சம்பவங்களை ஒப்புதல் வாக்குமூலமாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். அதன்படி வீட்டில் தங்கியிருந்த நிதர்சனா 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் கருவை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தந்தையின் வாக்குமூலம்
கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடையச் செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டமை தொடர்பில் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சிறுமியின் கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையின் மூலம் தெரியவருகிறது. சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்தமை பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக பல்லின் மாதிரியொன்றை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில்
இந்த நிலையில், கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவின் அக்காவின் கணவரின் வீட்டில் இன்று தடயவியல் பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், அது குறித்தும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை இதனை கண்டறியும் நோக்கில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள சில கிணறுகளின் நீரை இறைத்து பொலிசார் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும் துயரம்
மேலதிக விசாரணைகளின் பொருட்டு சம்பவ இடத்திற்கு இன்று சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா குறித்த கிணறுகளையும் பார்வையிட்டதுடன் , சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், இளநீல கறைபடிந்திருந்த மேசையினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
பரிதாபமாக உயிரிழந்த தரம் 7-இல் கல்வி கற்ற யோகராசா நிதர்சனாவின் நினைவாக அவர் பயன்படுத்திய கற்றல் உபகரணங்கள் மாத்திரமே இன்று அவரின் வீட்டில் எஞ்சியுள்ள நிலையில் சிறுமியின் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.