முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக இந்த மாதத்தில் மூன்று முறை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றிருந்தார்.
இந்த நிலையில், நான்காவது முறையாக விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
2008-2009ஆம் ஆண்டுகளில் கொழும்பின் தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
தம்மை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்வதற்கு தடைவிதிக்க கோரி முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவானது கடந்த மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது, அட்மிரல் கரன்னகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படமாட்டார் என்று என்று உறுதியளிக்க முடியாது என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உச்ச நீதிமன்றில் அறிவித்திருந்தார்.
எனினும், குறித்த மனு மீண்டும் கடந்த 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைதுசெய்யவோ, தடுத்து வைக்கவோ இடைக்கால தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், மார்ச் 11ஆம் திகதி காலை 9 மணிக்கு, வாக்குமூலம் அளிப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என்றும், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 11ஆம் திகதி முறையாக குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, முன்னிலையாகியிருந்தார்.
அதன் பின்னர், கடந்த 13ஆம் திகதி மற்றும் 19ஆம் திகதிகளில் வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.இந்த நிலையில், நான்காவது தடவையாக வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.