பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பதற்கு காரணமான வாகன விபத்தை ஏற்படுத்திய சாரதி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையான நவீது ஒமேஸ் ரத்னாயக்க என்ற குறித்த சாரதியை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கொழும்பு, பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத் சந்திர, பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு டிப்பெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்ளிட்ட 8பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், டிபென்டர் வாகனத்தை செலுத்திய பொலிஸ் அதிகாரியின மகனான நவீது ஒமேஸ் ரத்னாயக்க என்பவரை மாத்திரம் விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.