இலங்கை கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டி தலைவர் திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மது போதையில் வாகனத்தினை செலுத்தி பொரளை, கின்சி வீதியில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், திமுத் கருணாரத்ன பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.
திமுத் கருணாரத்ன பயணித்த கார், முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானதுடன், முச்சக்கரவண்டி சாரதி சிறு காயங்களுடன் கொழும்பு, தேசிய் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
நேற்று அதிகாலை 5.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரை செலுத்திய திமுத் கருணாரத்ன, விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், திமுத் கருணாரத்ன பொலிஸ் பிணையில் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதுடன், இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான திமுத் கருணாரத்ன, நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.